ஆலய வரலாறு:

ஆலயப் பின்னணி


பூநகரி நகரத்திற்கு அருகில் இருப்பவை தியாகம் மற்றும் தம்பிராய் ஆகிய சிறு கிராமங்கள் ஆகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கந்தர் ஆறுமுகம் என்பவர் தம்பிராய் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் இறைபக்தியோடு கடவுள் சேவையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு விவசாயத்தோடு கடவுள் பணியையும் ஆற்றி வந்தார். அவர் தம்பிராய் கிராமத்தில் இருந்து தினமும் தியாகத்திற்கு அலுவல் நிமித்தம் சென்று வருவதை வழக்கமாகக் கொண் டிருந்தார். அவ்வாறு தினமும் அலுவல்களுக்குச் செல்லும் போது அங்குள்ள கோவில்களுக்கும் சென்று வருவதைப் பழக்கமாக வைத்திருந்தார். தியாகத்தில் ஒரு பிள்ளையாரை மரத்திற்கு அடியில் சுயம்பு ரூபத்தில் வைத்து வழிப்பட்டு வந்தனர் அப்பகுதி மக்கள். ஒருநாள் அங்குச் சென்ற அவர் விநாயகர் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவர் ஏதேனும் தெய்வக் குற்றமோ என நினைத்து அங்குள்ள நபர்களை வைத்து ஒரு சிறு விழாவினை நடத்தி பின்பு பிள்ளையாரை எடுத்து மரத்திற்கு கீழே வைத்துவிட்டு வந்தனர். ஆனால், மறுநாள் சென்று பார்த்ததும் அவருக்கும், ஊர்மக்களுக்கும் அதிர்ச்சியான விஷயம் நடந்தது. மீண்டும் பிள்ளையார் கீழே விழுந்து இருந்தார். அவ்வூர் மக்கள் மீண்டும் பூஜை செய்து இறைவனை உருக்கத்தோடு வேண்டி பிள்ளையாரை மரத்தின் கீழ் வைத்துவிட்டு வந்தனர். மீண்டும் இதேபோல் விநாயகர் கீழே விழுவது தொடர்ந்துக் கொண்டு இருந்தது.

அன்று ஐயா கந்தர் ஆறுமுகம் அவர்களின் கனவில் விநாயகர் வந்து இறைவனுக்கு உகந்த இடம் தியாகம் அல்ல என்றும், அந்த இடம் மாற்றப்படவேண்டும் என்று கூறி மறைந்தார். பிறகு ஐயா கந்தர் ஆறுமுகம் அவர்கள் அங்கிருந்து தியாக மக்களின் அனுமதியோடு விநாயகரை தனது சொந்தக் கிராமமான தம்பிராய்க்கு எடுத்து வந்து தன் சொந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார். ஐயா ஆறுமுகம் அவர்கள் பிள்ளையாருக்குத் தியாகத்தில் இருந்து வந்ததால் தியாகத்துப் பிள்ளையார் என்று பெயரிட்டு வழிப்பட்டு வந்தார். பின்பு அவர்,அவர் சந்ததிகளிடம் பிள்ளையாருக்குக் கோவில் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

தம்பிராயில் எழுந்தருளிய பிள்ளையார் வேண்டுவோருக்கெல்லாம் வேண்டியதை அளித்து அருள்மிகு பிள்ளையாராகவும், குறைதீர்க்கும் விநாயகராகவும் அருள் பாலிக்கிறார். ஐயா கந்தர் ஆறுமுகம் அவர்களின் நீண்ட கனவாகிய கோவிலை அவர் வழி தோன்றலான ஆறுமுகம் குலசேகரம் அவர்கள் கோவில் எழுப்ப 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். ஆனால் பல்வேறு காரணங்களால் கோவிலை முடிக்க முடியாமல் போனது. இன்று குலசேகரம் பரமேஸ்வரன் அவர்கள் இன்று ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஐய்யனார் மற்றும் ஸ்ரீ முருகர் விக்கிரகங்களையும் அமைத்து ஆலயத்தை மேம்படுத்தியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக சிவகுருநாதர் என்பவர் கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில் பூஜை செய்து வருகிறார். இன்று அருள்மிகு தியாகத்துப் பிள்ளையாரின் சுயம்பு உருவத்தில் வளர்வது மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் ஆலயம்:

அருள்மிகு தியாகத்து பிள்ளையார் அவரை நாடி வந்து வேண்டுவோருக்கு எல்லாம் வேண்டியதை அளித்து,குறைதீர்த்து அருள் புரிகின்றார்.